பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – சுகாதார அமைச்சர்
(க.கிஷாந்தன்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி இன்று (12.05.2020) நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் அவர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
மத்திய மாகாண ஆளுநர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், மாவட்டத்துக்கு பொறுப்பான வைத்திய, பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பொது சுகாதார வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதனையார்கள் உட்பட மேலும் பல அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் சுகாதார அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர். அதற்காக தேவைப்பாடும் உதவிகளையும் குறிப்பிட்டனர்.
அத்துடன், மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைத்தடுத்து மக்களையும், நுவரெலியா மாவட்டத்தையும், மாகாணத்தையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்ததுடன், அதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
சுமார் இரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் சுகாதார விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தாலும் இறுதியில் சமுர்த்தி கொடுப்பனவு பற்றியும், மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாலின் போது கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர்,
” தோட்டத் தொழிலாளர்கள் 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைவான சம்பளம் பெறும் பட்சத்தில், குறைவான தொகையை ஈடுசெய்யும் வகையில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வகையிலேயே சுற்று நிரூபத்தில் ஏற்பாடு உள்ளது என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியுடனும் கலந்துரையாடி, ஏதேனும் தவறு இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் மீண்டும் அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை