சுமந்திரனுக்கு எதிராக யாழில் உருவ பொம்மைகள் வைப்பு!

ஆயுதப் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நல்லூரில் இரு இடங்களில் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படிருந்த வேளையிலேயே இனம் தெரியாத நபர்களால் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து வீதியோர மின் கம்பத்துடன் உருவபொம்மை கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பொலிஸாரால் குறித்த உருவ பொம்மை அகற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லூர் செம்மணி பகுதியிலும் இதுபோன்ற உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய எம்.ஏ.சுமந்திரன் ‘விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒருபோதும் ஏற்கமாட்டேன்’ எனக் கூறிய கருத்து தமிழ் மக்கள் பலரின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கருத்துக்கு எதிராக அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்புக்குள்ளும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன் ஏனைய தமிழ் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்துவருகின்றன.

இந்நிலையிலேயே, சுமந்திரனின் உருவ பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து யாழ். பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து அறிய முடிகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.