மலையகத்திலுள்ள நகர்ப்பகுதிகளில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டனர்.

(க.கிஷாந்தன்)

மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மலையகத்திலுள்ள நகர்ப்பகுதிகளில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டனர்.

சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் மதுபானம் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு செயற்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. குறிப்பாக அட்டன் நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருக்கு தலையிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சமூக இடைவெளி உட்பட பல காரணங்களைக் கருத்திற்கொண்டு மதுபான சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர ஏனைய 23 மாவட்டங்களிலும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் மே 11 ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதுபான சாலைகளும் திறக்கப்பட்டன.

அட்டன், நுவரெலியா, தலவாக்கலை, கம்பளை, புஸல்லாவை உட்பட மலையகத்திலுள்ள நகரங்களில் மதுபானங்களை வாங்குவதில் சிலர் மும்முரமாக செயற்பட்டனர். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களைவிடவும், மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.