தேர்தலினை இலக்காக கொண்டே விசாரணைகள் – மங்கள குற்றச்சாட்டு!
தேர்தலினை இலக்காக கொண்டே தனக்கெதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிருந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்த அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், “இது ராஜபக்சவின் வழமையான பாணி. முன்னைய ராஜபக்ச ஆட்சியின் போது என்னை சிஐடியினர் மூன்று முறை விசாரணை செய்திருந்தனர்.
அவர்கள் என்னை உளரீதியாக அழிப்பதற்கு முயன்றனர். நீங்கள் தவறான நபருடன் மோதிகின்றீர்கள், நீங்கள் எவ்வளவிற்கு தாக்குதலை மேற்கொள்கின்றீர்களோ அவ்வளவிற்கு நான் வலிமையானவனாக மாறுவேன்.
வடமாகாணத்திலிருந்து பல மைல் தொலைவில் உள்ள வாக்குசாவடிகளிற்கு வாக்களிக்க செல்ல வேண்டியவர்களிற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடபகுதி புனர்வாழ்வு திணைக்களம் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியது.
அவர்கள் விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டவர்கள். 1990இல் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஏனைய பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்கள். முன்னைய அரசாங்கங்கள் போல நாங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அவர்களிற்கு வாக்களிப்பதற்காக உள்ள உரிமையை உறுதி செய்தோம்.
நாங்கள் விசேடமான குழுவை சேர்ந்தவர்கள் குறித்து குறிப்பிடுகின்றோம். அவர்கள் 30 வருடங்களிற்கு மேலாக துயரத்தை அனுபவிப்பவர்கள். கடந்த 30 வருடங்களாக எந்த அரசாங்கமும் அவர்களிற்காக எதனையும் செய்யாத மக்கள். இதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.
அவர்களது வாக்குரிமை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்படுவதற்கு உதவியது குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இது குறித்து நான் பெருமைப்படுகின்றேன் என சிஐடியினருக்கு நான் தெரிவித்தேன்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை