ஊடகவியலாளரின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்!
ஊடகவியலாளன் மரணிக்கும் போது அவன் சார்ந்த சமூகத்தின் குரலும் மறைந்துவிடுகிறது. அந்த வகையில் மிதுன் சங்கரின் மறைவு கிழக்கு மாகாண ஊடகத்துறை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “கிழக்கு மண் மற்றுமொரு ஊடகவியலாளரை இழந்து தவிக்கிறது. கிழக்கின் திறமைமிக்க ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் பதவி வகித்து மும்மொழிகளிலும் செய்திகளை வழங்கி வந்த இரகுநாதன் மிதுன்சங்கர் என்ற இளம் ஊடகவியலாளரை கிழக்கு மண் இழந்து நிற்கிறது.
ஊடகத்துறை வரலாற்றில் காலத்துக்குக் காலம் நாம் பல ஊடகவியலாளர்களை பலிகொடுத்திருக்கிறோம். ஒரு ஊடகவியலாளரின் இழப்பு என்பது ஒரு சமூகத்தின் மறைவுக்கு சமமானது.
ஒரு ஊடகவியலாளன் மரணிக்கும்போது அவன் சார்ந்த சமூகத்தின் குரலும் மறைந்துவிடுகிறது. அந்த வகையில் மிதுன் சங்கரின் மறைவு கிழக்கு மாகாண ஊடகத்துறை வரலாற்றில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஊடகவியலாளர்கள் தங்களது பாதுகாப்பு குறித்தும் பாதுகாப்பான பயணங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இனியும் இவ்வாறான இழப்புகளை ஊடகத்துறை சந்திக்கக் கூடாது.
ஊடகவியலாளர் மிதுன்சங்கரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை