தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும்- உமாசந்திரா பிரகாஷ்
தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும் என மூத்த ஊடகவியலாளரும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பில் கிளிநொச்சி, சாந்தபுரம் கிராமத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் கூறுகையில், “தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்போது மண், நீர்முகாமைத்துவம் உள்ளிட்ட அபிவிருத்திகளும் இணைந்து கிடைக்க வேண்டும்.
தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கட்சிகளுக்கே வாக்களித்து வருகின்றனர். உண்மையில் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கும்போது அவர்களுக்கு அபிவிருத்திகளும் இணைந்து கிடைக்க வேண்டும்.
வெறுமனே தேசியம், சுயநிர்ணயம் என பேசிக்கொண்டு செல்லமுடியாது. இங்குள்ள நிலம், நீர் உள்ளிட்ட வளங்களை அபிவிருத்திசெய்து மக்களை அபிவிருத்திக்குள்ளும் கொண்டுசெல்ல வேண்டும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால்தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்போது மக்கள் அபிவிருத்திகளையும் இணைத்து பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் இங்குள்ள வளங்கள் அனைத்தும் வீணாகப் போய்விடும். அதனால் பாதிக்கப்படப்போவது மக்களே.
இங்குள்ள மக்கள், காணி, வீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வீடுகள் இல்லாமையால் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கின்றனர். ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வரை வாழ்கின்றனர். இவ்வாறான நிலையிலிருந்து மக்கள் மீள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை