சஜித் தலைமையில் நிழல் அமைச்சரவை – யோசனை முன்வைப்பு; விரைவில் இறுதி முடிவு
சஜித் பிரேமதாஸ தலைமையில் நிழல் அமைச்சரவையொன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
“இப்படியானதொரு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் இது குறித்து தீர்மானமொன்று எடுக்கப்படும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அமைச்சரவையின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காகவே குறித்த நிழல் அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது.
நல்லாட்சியின்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு, துறைசார் நிபுணத்தும் அடிப்படையில் நிழல் அமைச்சரவையில் பதவி வழங்கப்படவுள்ளது.
“தேர்தல் காலத்தில் ஆட்சியாளர்கள் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்யக்கூடும். அத்துடன், குறுகிய ஆட்சிகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சில திட்டங்களில் மோசடி இடம்பெற்றுள்ளது. இவை குறித்து ஆராய்வதற்கும், தொடர் கண்காணிப்புகளை செலுத்துவதற்கும் நிழல் அமைச்சரவை என்ற கட்டமைப்பு சிறப்பாக அமையும்” என்று மற்றுமொரு உறுப்பினர் தெரிவித்தார்.
அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிரணியில் இருந்தபோதும், நிழல் அமைச்சரவையொன்று உருவாக்கப்பட்டு, அதில் நிழல் பிரதமராக அவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை