வெளிநாட்டு கப்பற்துறை வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் வாய்ப்பு குறித்து அவதானம்!
கொவிட் 19 நோய்த்தொற்றுடன் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
தெற்கு கடல் மார்க்கமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் பயணம்செய்யும் உலக நாடுகளின் கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு காலி துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச்செல்லவுமான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.
நாட்டின் முக்கிய கப்பற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாரிக்கொண்டார்.
காலி துறைமுகத்திற்கு 10 கடல் மைல் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் தினமும் பயணிப்பதாக கம்பனிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அக்கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளின் பணிக்குழாமினருக்கும் இலங்கையிலிருந்து தமது நாடுகளுக்கு பயணம் செய்யும் வசதிகளை செய்துகொடுப்பதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஸ்ரீலங்கன் விமானச் சேவையை மேம்படுத்தவும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
காலி துறைமுகத்தை ‘சர்வதேச கப்பல் பணிக்குழாம் பரிமாற்ற மையமாக’ அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைய இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பு குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
உலகின் கப்பல் துறை தொழில்களில் 16 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 16000 இலங்கையர்களும் உள்ளடங்குவர். இந்த எண்ணிக்கை ஒரு வீதமாகும்.
இவர்கள் வருடமொன்றுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு ஈட்டித்தருகின்றனர். இத்தொகையை இரு மடங்காக அதிகரிப்பதன் மூலம் அந்நியச் செலாவணி வருமானத்தை இருமடங்காக அதிகரிக்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தரமான உயர் நியமங்களுடன் கூடிய சேவையை வழங்கக் கூடிய வாய்ப்பு குறித்த நம்பிக்கையை உலக கப்பல் கம்பனிகளுக்கு மத்தியில் உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கப்பல்களில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக ஆகியோரும் நாட்டின் முன்னணி கப்பற்துறை நிறுவனங்களின் தலைவர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை