தமிழர்களைக் கொன்றுகுவித்துவிட்டு போர் வெற்றிக் கொண்டாட்டமா? அரசிடம் மாவை கேள்வி
சர்வதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் போர் வெற்றிக் கொண்டாட்டத்தை ராஜபக்ச அரசு இன்று நடத்துகின்றது. இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றி விழாவை நடத்துவது நியாயமா?”
- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா.
“மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்கச் சென்றதை அரச படைகள் தடுத்தமையை ஒருபோதும் ஏற்றுக்கெள்ள முடியாது. மனிதாபிமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி கிளைக் காரியாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ்.மாவட்டத் தலைவர் பிருந்தாபன் தலைமையில் நடைபேற்றது. அங்கு உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பல மக்கள் பிரதிதிகள் இராணுவத்தினரின் சோதனை நிலையங்களில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
மக்கள் பிரதிநிதிகள் நினைவேந்தலுக்காகச் சென்றதைத் தடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதாபிமான நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும்.
இதேவேளை, செம்மணியில் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்றமைக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்டவர்களைத் தனிமைப்படுத்த முயற்சித்தமையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உலகத்தில் இல்லாத நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெறுகின்றன. சர்வதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் போர் வெற்றிக் கொண்டாட்டத்தை ராஜபக்ச அரசு நாளை (இன்று) நடத்துகின்றது. இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றிவிழாவை நடத்துவது நியாயமா?
ஆனால், உயிர்நீத்த எமது உறவுகளை நினைவுகூர இந்த அரசால் தடை ஏற்படுத்தப்படுகின்றது. இதனை ஏற்க முடியாது” – என்றார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.கஜதீபன் மற்றும் தமிழரசுக் கட்சியின் வாலிபர், மாதர் முன்னணிகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை