சீரற்ற வானிலை – வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் அதிகளவானவர்கள் பாதிப்பு!
இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கில் வீசிய பலத்த காற்றினால், யாழ்ப்பாணம், நெடுந்தீவு, உடுவில், நல்லூர், பருத்தித்துரை ஆகிய பகுகளைச் சேர்ந்த 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் ஓரிரு நாட்களுக்கு காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படும் அபாயம் உள்ளமையால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால், இதுவரை நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு அளவிலான மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கடும் பனி மூட்டமான காலநிலை நிலவுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அடை மழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்தில் மட்டும் 32 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 இற்கும் மேற்பட்டோரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்திலும் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளமையால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஹட்டன் – டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கொட்டகலை சார்மஸ் தோட்டத்தில் 23 குடும்பங்களும், தலவாக்கலை ஸ்டார்லின் பகுதியில் 25 குடும்பங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், தற்போது உறவினர்களின் வீடுகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது ஆடுகள் இருந்த பட்டி மீது மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளதை அடுத்து பட்டிக்குள் இருந்த ஆடுகளை காப்பாற்றுவதற்காக குறித்த நபர் சென்றுள்ள நிலையிலேயே, வெள்ளத்தில் சிக்குண்டு அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை