சர்வதேசத்தை பகைத்தால் இலங்கைக்கே பேராபத்து! – கோட்டாவின் உரைக்கு எதிராக ரணில், சஜித் போர்க்கொடி

“சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். இது நாட்டின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாதா?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

படையினருக்கு அழுத்தங்கள் கொடுக்கும் வகையிலும் நாட்டுக்கு அநீதியை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தொடர்ந்து செயற்பட்டால் அவற்றின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ளத் தயங்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போர் வெற்றி விழாவில் உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதியின் போர் வெற்றி விழா உரையை நான் கடுமையாகக் கண்டிக்கின்றேன். ராஜபக்சக்களின் செயற்பாடுகளினால்தான் இலங்கையை சர்வதேசம் ஒதுக்கி வைத்திருந்தது. இதற்கு கடந்த நல்லாட்சியில் நாம் தீர்வு கண்டிருந்தோம். சர்வதேசத்துடன் இணைந்து பயணித்தோம். இலங்கை மீதான சர்வதேசத்தின் கொடிய பார்வையை விலக்கியிருந்தோம். ஆனால், மீண்டும் அதே நிலைமைக்கு இட்டுச் செல்லும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார். சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். இது நாட்டின் தலைவரான ஜனாதிபதிக்குத் தெரியாதா? ஜனநாயக ரீதியில் மக்கள் அளித்த வாக்குகளினால் நாட்டின் தலைவரான இவர் சர்வாதிகாரப் போக்கில் – சர்வதேசத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்படுவது நாட்டுக்கும் மக்களுக்கும் ஏன் படையினருக்கும் அழகல்ல என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்” – என்றார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியின் போர் வெற்றி விழா சர்வாதிகாரத்தின் உச்சநிலையை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேசத்தைப் பார்த்து – கை நீட்டி எச்சரிக்கை விடுவது நாட்டுக்குத்தான் ஆபத்தாக மாறும் என்பதை ஜனாதிபதி புரியாமல் இருப்பது வெட்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் எமது நாடு பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளது. இந்தவேளையில் சர்வதேச அமைப்புகளினதும் நிறுவங்களினதும் உதவிகளை நாம் நாட வேண்டும். அதைவிடுத்து சர்வதேசத்தைப் பகைப்பது எமது நாட்டுக்குத்தான் பாரிய பின்வினைவுகளை ஏற்படுத்தும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.