ராஜிதவுக்கு விடுதலை வேண்டி சஜித் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!
வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரால் களுத்துறை நகரில் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ள பின்னணியில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று திரட்டி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைகளுக்கு அமைய, களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸவின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் களுத்துறை நகரில் கடந்த 19ஆம் திகதி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தைப் பொலிஸார் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், இந்த வீடியோ பதிவின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை