தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தலைமைகளே காரணம் – டக்ளஸ்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த கால தமிழ் தலைமைகளும் தற்போதைய தலைமைகளும்தான் காரணமாக உள்ளனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அலுவலகம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாக இருந்தால் எந்த நாடுகளாக இருந்தாலும் ஜனாதிபதி அதில் இருந்து ஒதுங்குவதாகவே அண்மையில் கூறி இருந்தார்.

ஜனாதிபதி கூறிய கருத்து தமிழ் மக்களை எந்த வகையிலும் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த கால தமிழ் தலைமைகள்தான் காரணமாக உள்ளனர் என நான் நம்புகின்றேன்.

சேர் பொன் இராமநாதன் முதல் சம்மந்தன் வரை அதற்கு இடைப்பட்ட எல்லோரும் அவர்கள் பிரச்சினைகளை சரியான முறையில் அனுகவில்லை என்பதே எனது அனுபவம்.

சுமார் 15 வருடங்களுக்கு மேல் ஆயுதப் போராட்டத்தின் முன் அனுபவம், சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஜனநாயக வழி முறையிலான அனுபவங்கள் இருக்கின்றன. இந்த அனுபவங்களின் ஊடாகவே நான் கூறுகின்றேன். நாங்கள் சரியான முறையில் அனுகவில்லை. ஜனாதிபதி கூறிய விடயம் தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.