யாழில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு
யாழ்ப்பாணத்தில் கடும் காற்று காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில நாட்களாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், “கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் ஒரு வீடு முழுமையாகவும் மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் 3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளன.
எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அத்தோடு தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் எதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை