கோட்டா தலைமையில் கொடுங்கோல் ஆட்சி! – சஜித் அணி குற்றச்சாட்டு
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொடுங்கோல் ஆட்சி இடம்பெறுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசின் இந்த முறைகேடான ஆட்சி காரணமாகவே அத்தியாவசிய பொருட்களுக்கு வரி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் நிதி முகாமைத்துவம் முறையாக மேற்கொள்ளாமையே ஆகும். அதனாலேயே இன்று பெருமளவான அத்தியாவசிய பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை அனர்த்தமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையே காண்பித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கு அரசே பொறுப்புக் கூறவேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலினால் எவ்வித வருமானமும் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய முறையில் 5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை வழங்கியிருந்தால், மக்கள் இவ்வாறு உயிரிழக்க வேண்டி ஏற்பட்டிருக்காது. தொடர்ந்தும் காலங்கடத்தாமல் இந்த நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது அரிசிக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. இது தொடர்பிலும் அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5 ஆயிரம் ரூபா நிவாரணமும் சமூர்தி நிதியத்திலிருந்தே வழங்கப்படுகின்றது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். இதுவும் சாதாரண மக்களின் நிதியாகும்.
கூறுவதை செய்யும், செய்வதையே கூறும் குணம் படைத்தவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே. அதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவருக்கே பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தற்போதைய அரசின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் தற்போது தெளிவு பெற்றிருக்கின்றார்கள் என்று கருதுகின்றோம்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களில் பெருந்தொகையானோர் இன்று எம்முடன் இணைந்துள்ளனர்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை