ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் – ஜனாதிபதி செயலகம்

நாடுமுழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்த கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகின்றது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்படும் காலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதிகளில் சரியான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், “ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

நோய்த்தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இவற்றில் அடங்கும்.

அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கை மற்றும் யாரை சேவைக்கு அழைப்பது என்பதை அந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் அனைவரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அரசு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது” என தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.