ஊரடங்கு தளர்வு – சுகாதார கட்டுப்பாடுகளுடன் வழமைக்கு திரும்பும் மக்கள்
நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், மக்களின் நாளாந்த நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.
இதேநேரம் சுமார் 60இற்கும் மேற்பட்ட நாட்களுக்கு பின்னர் கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மக்கள் இன்று காலை வேளையிலேயே வெளிமாவட்டங்களுக்கு சென்றனர்.
இதற்கமைய மலையகத்தில் ஹட்டனில் இருந்து கண்டி உட்பட ஏனைய சில மாவட்டங்களுக்கான அரச மற்றும் தனியார்துறை போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றன.
ஹட்டன், நுவரெலியா, பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட், பூண்டுலோயா, தலவாக்கலை ஆகிய நகரங்களில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டிருந்தன.
மலையக நகர்ப்பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளும் சமூக இடைவெளியைப் பின்பற்றியே நடைபெற்றது. ஒரு சிலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறியிருந்தாலும் பெரும்பாலானவர்கள் பொறுப்புடன் செயற்படுவதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் எச்சரிக்கப்பட்டனர். பேருந்துகளில் ஆசனங்களின் அளவுக்கேற்பவே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மதுபான விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
எனினும் அண்மைய நாட்களை போல நீண்டவரிசையில் நபர்கள் நிற்பதை காணக்கூடியதாக இருக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேபோல ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில், வவுனியா நகரில் மக்கள் தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஊழியர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன், மக்களும் தமது தேவைகளை நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களை நோக்கி சென்றிருந்தனர்.
இதேவேளை வட. மாகாணத்திற்குட்பட்ட ஜந்து மாவட்டங்களிலும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போல இடம்பெற்றிருந்ததுடன், வெளிமாவட்டங்களிற்கு செல்வதற்காக அதிகளவான பொதுமக்கள் பேருந்து நிலையத்தை நோக்கி வருகைதந்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலில் கைகளை கழுவி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், சுகாதார நடைமுறைகளை கண்காணிப்பதற்கு பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேபோலவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து மாவட்டம் வழமை நிலைக்கு திரும்பிவருகின்றது.
இன்றைய தினம் அதிகளவான மக்கள் வெளியில் சென்று தமது தேவைகளை நிறைவேற்றிவருவதை காணமுடிந்ததாக மது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அரச மற்றும் தனியார் துறைகள் தமது வழமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதையும் மக்கள் அங்கு சென்று தமது சேவைகளை பெற்றுக்கொள்வதையும் அவதானிக்கமுடிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச போக்குவரத்துகள் தனியார் போக்குவரத்துகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், அதிகளவான மக்கள் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்துவதை அவதானிக்கமுடிகின்றதென்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார துறையினரர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை பெரும்பாலான மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு பொதுச்சந்தை இன்னும் மக்கள் பாவனைக்கு திறக்கப்படாத நிலையில் லேடிமெனிங் வீதியில் பொதுச்சந்தை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை