காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் கொட்டகலையில்.
காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55ஆவது வயதில் காலமானார்.
திடீர் உடல்நலக் குறைவினால் நேற்று கொழும்பு – தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர், அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், அன்னாரின் பூதவுடல் இன்று (புதன்கிழமை) முற்பகல் 11 மணி வரை பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள அன்னாரது இராஜகிரிய இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன், நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
அதன்பின்னர் அங்கிருந்து றம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
அங்கு மக்களின் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெற்றபின்னர், கொட்டகலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை