இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் – ஜனகன்
இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர், யுவதிகளின் தொழில் பாதுகாப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கொழும்பு மாவட்டத்தில் தற்போது பல இளைஞர், யுவதிகள் பொருற்களை விநியோகிப்பவர்களாக மற்றும் வாகன சாரதிகளாகத் தொழிலாற்றுகிறார்கள். இவர்களின் தொழில் பாதுகாப்புக் கேள்விக்குறியாகவே உள்ளது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டத்தில் இவ்வாறு நெகிழ்வுத் தன்மையுடனும் மாறும் பணிச்சூழலிலும் தொழிலாற்றுவோரைப் பாதுகாக்கும் முறையில் திருத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இதனால் பல எதிர்பார்ப்புகளுடன் இந்தப் புதிய தொழில்முறையில் ஈடுபடும் இளைஞர், யுவதிகள் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுக்கிறார்கள்.
பல சந்தர்ப்பங்களில் தாங்கள் எதிர்நோக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு எவ்வாறு சட்ட ரீதியாக கையாள்வது என்று தெரியாமல் நிர்க்கதியாகிறார்கள்.
இந்தத் தொழில்களை வழங்கும் நிறுவனங்களுக்குத் தமது வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் தேவை அதிகம் இருப்பதால் இத்தொழிலாளர்களின் நலனில் அதிக சிரத்தை எடுப்பதில்லை.
இந்த நாட்டின் எதிர்காலத்துக்கு இந்த இளைஞர், யுவதிகளின் பங்கு மிக அவசியம் என்பதை அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான தொழில் முயற்சிகள் எமது நாட்டுக்கு பல்வேறு வகையில் பயனளிக்கும் என்பதும் உண்மை. எனவே, இந்த flexible and dynamic முறையான தொழிலாளிகளைப் பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் புதிய இணைப்புகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்’ என, கலாநிதி ஜனகன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை