குவைத்திலிருந்து வந்தவர்களுக்கே அதிகளவில் கொரோனா தொற்று – பிரசன்ன ரணதுங்க
குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மிகவும் பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்துடனே செயற்படுகின்றது.
குவைத் நாட்டில் இருந்து வந்த இலங்கையர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அனுப்பும்போது குருதி பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளப்படுத்தப்படவில்லை என்றும் குவைத் அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இவர்கள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் .
நாட்டுக்குள் வரும் அனைத்து இலங்கையர்களுக்கும் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது” என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை