இந்தியாவை தாக்கவுள்ள நிசார்கா புயல் – மும்பைக்கு ஆபத்து என எச்சரிக்கை

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மும்பை அதிக பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபி கடலில் மத்திய கிழக்கு பகுதியிலும் லட்சத்தீவுகளிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது நிலவி வருகிறது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறக்கூடும் என இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கு நிசார்கா என்று பெயர் வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, அநேகமாக நாளை இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கியும், பிறகு, வடக்கிலிருந்து கிழக்காகவும் நகர்ந்து மகாராஷ்டிராவுக்கு செல்ல உள்ளது. மறுநாள், ஜுன் 3ஆம் திகதி மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியில் இருந்து குஜராத்தின் தெற்கு பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மகாராஷ்டிரா, குஜராத் கடற்கரைகளில் பலமான காற்றும், மிக மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக நாட்டில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.

அதிலும் வைரஸ் தொற்றால் மீள முடியாமல் தவிக்கும் மும்பையில் தற்போது இந்த புயல் காரணமாக அதிகம் பாதிப்புகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜுன் 3ஆம் திகதி புயல் கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குஜராத், மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளுக்கு எதிர்வரம் ஜுன் 3ஆம் திகதி முதல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதேபோல, குஜராத், கோவா ஆகியவற்றுக்கும் மறுநாள், ஜுன் 4ஆம் திகதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த புயல் தமிழகத்தை தாக்காது என்றும் தமிழகத்தில் வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

129 ஆண்டுகளுக்குப் பின்னர் அரபிக் கடல் புயல் கடலோர மகாராஷ்டிரா பகுதிகளை ஜுன் மாதத்தில் தாக்க காத்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், இந்த எச்சரிக்கையும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.