கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் வேகமாகப் பரவும் எலிக்காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் அதிகம் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக நெல் உள்ளிட்ட ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினாலும் தரிசு நிலங்களில் பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாலும் எலிக் காய்ச்சல் பரவக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

அத்தோடு கடந்த சில வாரங்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவியதால் எலிக் காய்ச்சல் தீவிரமடையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

எலிக் காய்ச்சலானது பற்றீரியா மூலம் பரவக்கூடிய நோயாகும். எலி உள்ளிட்ட சில கால்நடைகளின் சிறுநீர் மூலம் இந்த பற்றீரியா பரவக் கூடும்.

வயல்கள் மற்றும் நீர் அகழிகள் உள்ளிட்ட நீர் நிறைந்துள்ள இடங்களில் இந்த பற்றீரியாக்கள் அதிகளவில் காணப்படும். நீரிலுள்ள இந்த பற்றீரியாக்கள் வெட்டுக்காயங்கள், கண், வாய் என்பவற்றின் மூலம் மனித உடலில் செல்லக்கூடியவையாகும்.

எலிக்காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகள் திடீர் காய்ச்சல், தசைப்பிடிப்பு, கடுமையான முதுகு வலி என்பனவாகும். இவை தவிர கண் சிவப்பாதல், வாந்தி, தலைவலி, சிறு நீர் நிறம் மாறுதல், சிறு நீர் குறைவடைதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளும் ஏற்படும்.

நெல் மற்றும் பிற விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்தல் அத்தியாவசியமாகும்.

இந்நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று உரிய மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கான மருந்துகளை வாரம் ஒரு முறை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கான மருந்துகளை உரிய நேரத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படக் கூடும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.