முன்னர் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருந்தாலும் கறவைப் பசுக்கள் இறக்குமதி சரி என்கின்றது பொதுஜன பெரமுன
உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்ரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் சரியானதே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் இருந்து கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட கறவைப் பசுக்களினால் ஏற்கனவே பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினார்.
மேலும் பெரிய நிதி நெருக்கடியின் போது வரி செலுத்துவோரின் பணம் இத்தகைய திட்டங்களுக்கு ஏன் செலவிடப்பட்டது என்றும் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சட்டத்தரணி சாகர காரியவசம், அரசாங்கம் எடுத்த முடிவு சரியானது என கூறினார்.
பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய தேவையை பூர்த்தி செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கடந்த அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக அத்தகைய திட்டத்தை கைவிட முடியாது என்றும் கடந்த ஆட்சியின் போது இந்த திட்டத்தில் அதிர்ச்சியூட்டும் முறைகேடுகள் நடந்ததாக ஜனாதிபதி விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டளவில் இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த முயற்சியை 2014 ஆம் ஆண்டில் அப்போதைய பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடங்கினார்.
20,000 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய 2014 ஆம் ஆண்டில் கடந்த அரசாங்கத்தின் கீழ் 73 மில்லியன் டொலருக்கான ஒப்பந்தம் அவுஸ்ரேலியாவின் வெல்லார்ட் ரூரல் எக்ஸ்போர்ட்ஸ் (பி.டி.) லிமிடெட் நிறுவனத்துடன் கையெழுத்தானது.
இந்த திட்டத்தை பின்னர் அமைச்சர் பி. ஹாரிசன் புதுப்பித்தமையினை தொடர்ந்து, அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவினால் தொடரப்பட்டது.
இதன்பின்னர் 2017 மார்ச் 24 அன்று இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து, 2017 மே 12 அன்று நியூசிலாந்திலிருந்து 2,000 கறவைப் பசுக்களையும் மீண்டும் 2017 டிசம்பரில் அவுஸ்ரேலியாவில் இருந்து 3,000 கறவைப் பசுக்களையும் அரசாங்கம் இறக்குமதி செய்தது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கறவைப் பசுக்களும் அவற்றின் சந்ததியும் இறந்துவிட்டதால், கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை திட்டத்தை இடைநிறுத்துமாறு அகில இலங்கை கமநல சம்மேளனம் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை