அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் – மைத்திரி

சர்வதேச பொலிஸ் ஊடாக அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ’21 ஆயிரம் கையொழுத்துக்களை நான் மூன்று நாட்களில் இட்டேன் என்ற கருத்தை, ஒரு சிலர் சமூக வலைத்தளங்களின் ஊடாக விமர்சித்து வருவதை நான் அவதானித்தேன்.

அந்த ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டவையாகும். குறித்த திணைக்கள அதிகாரிகள்தான், 21 ஆயிரம் கையெழுத்துக்களை பதிவிட வேண்டும் என கூறினார்கள். இதற்கான காலத்தை நான் உடனடியாக ஒதுக்கி, கையெழுத்துக்களை ஆவணங்களில் இட்டேன்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மர்ஜுன் மகேந்திரனை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தின் ஊடாக சர்வதேச பொலிஸாருக்கு கடிதங்களும் அனுப்பப்பட்டன.

இவ்வாறு நாம் சர்வதேச பொலிஸாருக்கு கடிதம் எழுதிய காலக்கட்டத்தில், எமது அரசாங்கத்தின் சிலரே, இது நிதி மோசடியுடன் தொடர்புடைய பிரச்சினை அல்ல என்றும் அரசியல் பிரச்சினையொன்றும் சர்வதேச பொலிஸாருக்கு மாற்றுக் கடிதங்களை அனுப்பியிருந்தார்கள்.

இதனை அடுத்து சர்வதேச பொலிஸார், மாற்றுக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமையால் இந்த விடயத்தில் முன்னிலையாக முடியாது என்று எமக்கு அறிவித்திருந்தார்கள்.

பின்னர், நாம் மீண்டும் பல்வேறு தரவுகளை சேகரித்து, பெரிய ஆவணமொன்றை சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பியிருந்தோம். இதன் பின்னர்தான், அவர்கள் இந்த விவகாரத்தை ஏற்றுக் கொண்டு சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில், எனக்கு தற்போது கிடைத்துள்ள தகவலுக்கு அமைவாக அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் இருப்பதோடு, அவரது பெயரையும் மாற்றிக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனால், மீண்டும் ஆவணங்களை சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச பொலிஸாருக்கு மாற்றுக் கடிதங்களை அனுப்பிய தரப்பினருக்கு, சிங்கப்பூரின் அதிகார வர்த்தினருடன் தொடர்பு உள்ளமை உறுதியாகியுள்ளது.

தனிப்பட்ட நட்பு ரீதியான உறவொன்று காணப்படுகிறது. இதனால்தான், இந்த விடயத்தில் இவ்வளவு தாமதம் காணப்படுகிறது. இது முற்றிலும் உண்மையான ஒரு செய்தியாகும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.