நீதியின் வழியில் நடந்ததால் நியாயமான தீர்ப்பு கிடைத்தது – கோட்டா மகிழ்ச்சி
நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்தேன். இந்தநிலையில் அதனைச் சவாலுக்குட்படுத்தி – அதனை வலுவிழக்கச் செய்யும் எதிரணியினரின் முயற்சி படுதோல்வியடைந்துள்ளது. நான் அரசமைப்பை மதித்து நீதியின் வழியில் நடந்ததால் நியாயமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவிப்பு, நாடாளுமன்றத் தேர்தல் திகதி (ஜூன் 20) வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ள நிலையில் மேற்படி கருத்தை ஜனாதிபதி கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சட்டப்படியே நாடாளுமன்றத்தைக் கலைத்தேன். இதை எவராலும் சவாலுக்குட்படுத்த முடியாது. இதை அறிந்தும் எதிரணியினர் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். அடுக்கடுக்காக மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்த தேர்தல் திகதியையும் அவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், உயர்நீதிமன்றம் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை நான் வரவேற்கின்றேன்.
நாட்டின் தற்போதைய நிலைமையில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியே தேர்தல் நடக்கும். அதற்கமைய தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை