ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் அமெரிக்க பொலிஸார்!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் போராட்டங்களின் போது பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் பல காணொளிகள் வெளிவந்துள்ளன.
நியூயோர்க் மாநிலத்தின் பஃபேலோவில், நயாகரா சதுக்கத்தில் நடந்த போராட்டத்தின் பின்னர் வயதான மனிதரை இரு பொலிஸ் அதிகாரிகள் தரையில் தள்ளிவிடும் காணொளி வெளியாகி தற்போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மனிதர் பொலிஸ் அதிகாரிகளிடம் ஏதே கூறுவதற்கு செல்லும் போது, அவர் அதிகாரிகளால் தள்ளிவிடப்படுகிறார். கீழே விழுந்த அந்த நபரின் தலையில் இருந்து இரத்தம் சிந்திய போதும், அவரை கடந்து சென்ற பல அதிகாரிகள் அவரை பொருட்படுத்தவில்லை.
இந்த காணொளி தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய பஃபேலோ பொலிஸ் ஆணையர் பைரன் லாக்வுட் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்த காணொளியில் உள்ள நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கே இன்னமும் நீதி கிடைக்காத நிலையில், பொலிஸாரின் இதுபோன்ற, மிருகத்தனமான தாக்குதல்கள் ஆபிரிக்க அமெரிக்கர்களை இன பாகுபாடு மற்றும் பொலிஸ் நடத்தைக்கு எதிரான போராட்ட அலைகளைத் தூண்ட செய்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை