துருக்கி 40 நாடுகளுக்கான விமானச் சேவையை மீண்டும் தொடர முடிவு!
பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு துருக்கி இம்மாதத்தில் 40 நாடுகளுக்கான விமானச் சேவையைத் மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது.
இதில், முதற்கட்டமாக இத்தாலி, சூடான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, ஜோர்டன், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளிடையே இருதரப்பு விமானச் சேவைக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
துருக்கியில் கடந்த திங்கட்கிழமை உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதத்தில் வெளிநாடுகளுக்கு இடையேயான விமானச் சேவையை ஐந்து கட்டமாக தொடங்க இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆதில் கரைஸ்மெயிலோக்லு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பரவலின் முக்கியக் கட்டத்தைக் கடந்துவிட்டோம். இனி உலக வர்த்தக உறவை, வணிகத்தைத் தொடர வேண்டும். தற்சமயம் 92 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என கூறினார்.
துருக்கியில் ஜூன் 10ஆம் திகதி வடக்கு சைப்ரஸ், பஹ்ரைன், பல்கேரியா, கட்டார், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜூன் 15ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளுக்கும், ஜூன் 20ஆம், 22ஆம், 25ஆம் ஆகிய திகதிகளில் தென்கொரியா, நெதர்லாந்து, நோர்வே, பெல்ஜியம் உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் விமானச் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை