இலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகள் விசேட விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

அதற்கமைய ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நடவடிக்கையாக இந்திய விமானங்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பெங்ளூர் மற்றும் புதுடெல்லிக்கு இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 1ஆம் திகதி கொழும்பிலிருந்து பெங்ளூர் நோக்கி இந்த விசேட விமானம் பயணிக்கவுள்ளது.

அதேநேரம், மற்றொரு விடேச விமானம் எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பிலிருந்து புது டெல்லிக்கு பயணிக்கவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நிர்க்கதியாகி இடம்பெயந்துள்ள தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன்வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு விசேட விமான சேவையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில், பதிவு செய்யப்பட்டிருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுக்கு மாத்திரமே குறித்த விமானத்தில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில், இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் www.hcicolombo.gov.in/COVID_helpline  என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.