கொழும்பு, கம்பஹாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பேருந்துகள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்படுகின்றன.

இதன்மூலம் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள அமுல்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, பேருந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து கண்காணிப்பதற்காக நாளாந்தம் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, 500 மேலதிக அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாளை காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையும் பேருந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை விதி நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த காலப்பகுதியில் பேருந்துக்கான ஒழுங்கையில் உந்துருளிகள், மகிழுந்துகள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் பயணிப்பதற்கு முழமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விதிமுறையானது எதிர்வரும் நாளை முதல் 22ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

22 ஆம் திகதியின் பின்னர் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.