கல்முனை, களுவாஞ்சிக்குடி எல்லைப் பிணக்கைத் தீர்க்க நடவடிக்கை
கல்முனை மாநகர சபை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை என்பவற்றின் எல்லை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, தீர்வுக்கான மூலோபாயத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் உட்பட மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், கோவில்களின் நிர்வாக முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச சபையினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லையை மீட்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த சர்ச்சை நீடிப்பதனால் எல்லைக் கிராமங்களான பெரிய நீலாவணை மற்றும் பெரிய கல்லாறு ஆகிய இரு பிரதேசங்களினதும் மக்களிடையே அடிக்கடி முறுகல் நிலை தோன்றுவதாகவும் அவ்விரு ஊர்களும் தமிழ் கிராமங்களாக இருக்கின்ற போதிலும், பெரிய நீலாவணையின் கோவில் விசேட நிகழ்வுகளுக்கான சோடனைகள் கூட சேதப்படுத்தப்பட்டு, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கும் எமது எல்லையை பாதுகாப்பதற்குமான அத்தனை நிர்வாக நடவடிக்கைகளையும் மேயர் தலைமையில் கல்முனை மாநகர சபையே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் எம்.பி.கோடீஸ்வரன், மேயர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம் என்று உறுதியளித்தார். தேவையாயின் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிற்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது எல்லை குறித்து ஆவணங்களுடன் தெளிவுபடுத்திய மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் கருத்துத் தெரிவிகையில்;
“1961ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்படும்போது கார்ட் வீதியே இவ்விரு மாவட்டங்களினதும் எல்லையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை என்பவற்றின் எல்லையாக கார்ட் வீதியே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
1970 காலப்பகுதியில் இந்த எல்லை தொடர்பில் சர்ச்சை தோன்றியபோது, அவ்வேளை கல்முனையின் கரைவாகு வடக்கு ஊராட்சி மன்றத்தின் தவிசாளராக பதவி வகித்த முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா, கார்ட் வீதியே சரியான எல்லை என இரு தரப்பு பேச்சுவார்த்தையில் நிரூபித்திருக்கிறார். அது அரசாங்க அதிபர்கள் மற்றும் அதிகாரிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படியே அவர் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இதனை அடியொற்றியே மேற்படி ஊராட்சி மன்றமும் இணைக்கப்பட்டு, 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்முனை பிரதேச சபைக்கான விசேட வர்த்தமானியில் அதன் வடக்கு எல்லையாக கார்ட் வீதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவ்வாறே 1998ஆம் ஆண்டு கல்முனையானது நகர சபையாக தரமுயர்த்தப்பட்ட போதும் 2001 ஆம் ஆண்டு மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்ட போதும் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்களில் அதன் வடக்கு எல்லை கார்ட் வீதி என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையானது இந்த எல்லையைத் தாண்டி எமது பகுதியை ஊடுருவி, ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் கருணா அம்மான் பிரதி அமைச்சராக பதவி வகித்தபோது, அந்த எல்லையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ‘கல்முனை மாநகர சபை அன்புடன் வரவேற்கிறது’ எனும் பெயர் பலகையை அவர் உடைத்தெறிந்து விட்டு சென்றிருந்தார்.
அது மட்டுமல்லாமல் அந்த வீதியால் செல்கின்ற எமது மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்கள்
வழிமறிக்கப்பட்டு, அடிக்கடி தாக்கப்பட்டும் இடையூறு ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன.
ஒரு சந்தர்ப்பத்தில் எமது ஊழியர்களுக்கு அங்கு இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டபோது மாநகர சபையின் சில உறுப்பினர்களுடன் நான் ஸ்தலத்திற்கு சென்றபோது, களுவாஞ்சிக்குடி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட கும்பல் ஒன்று எம்மை தாக்குவதற்கும் முற்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த எல்லை பிரச்சினையானது தற்போது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாக மாறியிருக்கிறது. பெரிய நீலாவணையின் ஒரு கோவில் விசேடம் தொடபிலான ஊர்வலம் கூட அப்பகுதியால் செல்ல விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய எல்லைக் கிராமங்களான பெரிய கல்லாறு மற்றும் பெரிய நீலாவணை பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் ஒரே இனத்தவர்களாக இருக்கின்ற நிலையில் சில அரசியல்வாதிகளின் தேவைக்காக மக்கள் தூண்டி விடப்படுகின்றனர்.
ஆகையினால் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்குமாயின், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மிகவும் இலகுவாக, வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். உடனடியாக இப்பணியை ஒன்றிணைந்து முன்னெடுப்போம். நமது எல்லையைப் பாதுகாப்பதற்கு நீங்கள் மிகவும் ஆர்வத்துடன் தாமாக முன்வந்து, ஒத்துழைப்பதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கின்றேன்” என்று முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபை உறுப்பினர்கள், கோவில்களின் பிரதம தர்மகத்தாக்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 09 பேர் அடங்கிய செயற்பாட்டுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் நாளை மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை சந்தித்து, அவருக்கு இப்பிரச்சினை குறித்து தெளிவுபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டதுடன் அதற்கான நேர ஒதுக்கீடும் இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், அம்பாறை மாவட்ட செயலாளர், நில அளவை அத்தியட்சகர், கல்முனை, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் போன்றோரை தனித்தனியாக சந்திப்பது எனவும் அச்சந்திப்புகளின் பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கான ஒழுங்குகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை