தனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது – அநுர
நாட்டு மக்களின் உயிர்களை பலி கொடுத்தேனும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் ஆளும் தரப்பினர் தற்போது முயற்சித்து வருகிறார்கள் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று எமது நாட்டில் கல்விச் சேவை முற்றாக செயலிழந்துள்ளது. அரச – தனியார் கல்வித் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், மாணவர்களின் எதிர்க்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. பரீட்சைகள் தொடர்பான ஒரு தெளிவின்மை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை மாணவர்களின் எதிர்க்காலம் தொடர்பாக எந்தவொரு ஸ்தீரமான நிலைப்பாட்டுக்கும் வரவில்லை என்றே தெரிகிறது.
மாறாக, இந்தத் தரப்பினர் பொதுத் தேர்தலையே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். இன்று இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்கூட அரசாங்கம் தேர்தலை நடத்தத் தான் தீர்மானித்துள்ளது.
அதாவது, நாட்டு மக்களின் உயிர்களை பலி கொடுத்தேனும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று விட வேண்டும் என்பதுதான் ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினரின் நோக்காக இருக்கிறது.
இவர்களின் தற்போதைய செயற்பாடுகளின் ஊடாக இது நன்றாகத் தெரிகிறது. மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, தனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே இவர்கள் முற்படுகிறார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை