‘மக்களின் நாயகன்’ என மஹிந்தவை சம்பந்தன் புகழ்ந்தமை அரசியல் நாடகம் – தவராசா

மக்களின் நாயகன் மஹிந்த ராஜபக்ஷ’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்ந்துள்ளமையானது அரசியல் நாடகம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

9 மாகாணங்களும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி, ஆளுநர்களின் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே.

இந்நிலையில், அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவை மக்களின் நாயகன் என பல வார்த்தைகளை தொட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவரின் புகழாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மஹிந்த அரசினை கடுமையாக விமர்சித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைக் கையாண்ட முறைமை தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைத்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட ராஜபக்ஷ குடும்பத்தினரை கடுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அவரது கட்சியினர் விமர்சித்தனர்.

சம்பந்தனின் திடீர் புகழாரம் அரசியல் கபட நாடகமே. இன்று நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை ஆட்சிமுறை நடைபெறாது ஆளுநர்களின் அதிகாரம் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. இவர்களின் செயற்பாடுகளினாலேயே மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாது போனது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.