யாழில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பெண்ணொருவர் கைது!
யாழில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்திலில் ஈடுபட்டதாக பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிற்கும் சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பூம்புகார் பகுதியில் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் வைத்தியசாலை ஊழியர்கள் போன்று மருத்துவக் குறியீட்டு ஸ்ரிக்கர் ஒட்டியவாறு பயணித்த பெண்ணை மறித்து சோதனையிட்ட போதே போதைப் பொருளை அவரது உடைமையில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டதாக பொலிஸா்ர குறிப்பிட்டனர்.
அதனையடுத்து அப்பெண்ணை கைதுசெய்த புலனாய்வாளர்கள் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்த போது, போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபருடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்நிலையில் பெண்ணை தொடர்ந்து பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை