முழுமையான உதவியை தருகிறேன் பெறுபேறுகளை காட்டுங்கள் – ஜனாதிபதி
ஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனம்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மிகவும் சிறியளவில் உள்ள ஏற்றுமதித் துறையை சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு விரிந்தளவில் எடுத்துச் சென்று நல்ல பெறுபேறுகளை கொண்டுவருவது ஏற்றுமதியாளர்களின் முன் உள்ள சவாலாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களை தெளிவுபடுத்தவும், ஏற்றுமதி வியாபாரத் துறை முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளை இனம்காண்பதற்கும் இத்துறையின் முன்னணி வர்த்தகர்களுடன் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கொவிட் 19 நோய்த்தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் பின்னடைவை கண்டுள்ளன. நோயை ஒழித்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளுடன் எதிர்பார்ப்புகளை கடந்து பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஒரு சில வர்த்தகங்கள் மட்டுமே ஒரு பில்லியனுக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டுகின்றன. எனினும் அதனை இன்னும் அதிகளவு விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கறுவா, கராம்பு, சாதிக்காய் போன்ற விவசாய ஏற்றுமதிகளுக்கு பெறுமதி சேர்த்து அதிக வருமானத்தை ஈட்ட முடியும். கொவிட் 19 பரவலுடன் உலக பொருளாதாரத்தில் புதிய சந்தையொன்று உருவாகியுள்ளது.
மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் பாரிய சந்தையொன்று உருவாகி வருகிறது. முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தலில் விரிவான அறிவுள்ள எமது ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தான் உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புதிய உத்வேகத்துடன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்தும் பொறுப்பும் ஏற்றுமதியாளர்களை சார்ந்ததாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சிறிய நாடு என்ற போதும் அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு அதிக முதலீட்டை செய்துள்ளது. அதனாலேயே கொவிட்19 நோய்த்தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்க முடிந்தது.
இந்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான விவசாய பயிர்கள் மற்றும் அத்தியாவசியமல்லாத பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் அந்நியச் செலாவணி விகிதத்தை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்க மற்றும் தனியார் துறை வங்கிகளின் பங்களிப்பு குறித்த விமர்சனமொன்று சமூகத்தில் உள்ளது. வர்த்தகத்திற்காகவும் மக்களின் நலன் பேணலுக்காகவும் அரசாங்கம் வழங்கும் நிவாரணம் வங்கிகளின் மூலம் சமூகத்தை முழுமையாக சென்றடைவதில்லை என தெரிய வருகிறது.
அது உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகும் என்றும், மத்திய வங்கி அல்லது அரசாங்க வங்கிகளின் அதிகாரிகள் அரசாங்கத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லையாயின் அவர்களை நீக்கிவிட்டு செயற்படுகின்றவர்களுடன் நாட்டின் தேவையை நிறைவேற்றுவதற்கு பின்னிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொருளாதார மந்த நிலையை வெற்றிகொள்வதற்கு பாரம்பரிய சிந்தனையிலிருந்தும் பணி முறைமையிலிருந்தும் விலகி தைரியமாக தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சில ஏற்றுமதி பயிர்களுக்காக உரம் கிடைக்காமை மற்றும் பண்ணை உற்பத்தியில் விலங்குகளுக்கான உணவுத் தட்டுப்பாடு குறித்தும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், முதலீட்டுச் சபை, சுங்கம் உள்ளிட்ட ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்பை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் வழங்கும் ஒத்துழைப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாக ஏற்றுமதி வர்த்தகர்கள் குறிப்பிட்டனர். அதற்காக ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ வழங்கிவரும் ஒத்துழைப்பையும் அவர்கள் பாராட்டினர்.
தேங்காய், தேங்காய் எண்ணெய், தென்னை உற்பத்திகள், தேயிலை, ஆடைகள், மரக்கறி, பழங்கள், இறப்பர் உற்பத்திகள், தகவல் தொழிநுட்பம், கடலுணவுகள், மிளகு உள்ளிட்ட சிறு பயிர் ஏற்றுமதியுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஏற்றுமதியை பல்வகைப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கண்டறியப்பட்டது.
மீள் ஏற்றுமதிக்கு தேவையான சில மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதனை சுதேச விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் பலப்படுத்தும் வகையிலுமே செய்ய வேண்டும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நுகர்வுக்கு தேவையான தேங்காய்களை வீட்டுத் தோட்டங்களிலேயே உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்காகும். உலக சந்தையில் தென்னை கைத்தொழில் சார்ந்த ஏற்றுமதிக்கு அதிக கேள்வி உள்ளது. எனவே தென்னந்தோட்டங்களை பாதுகாத்து வட மாகாணத்திலும் ஏனைய மாகாணங்களிலும் தென்னை கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாய அறுவடைகள் குறித்து உடனடி முறைமைகளின் ஊடாக தகவல்களை திரட்டுவதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு அவற்றை கொள்வனவு செய்வதற்கு இலகுவாக அமையும் என்றும் ஏற்றுமதியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
தொழிநுட்ப உபகரணங்களை கொண்டுவந்து பாகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் குறைந்த விலையில் கணினி, மடிக் கணினிகள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல உற்பத்திகளை உள்நாட்டிலேயே மேற்கொள்ள முடியும் என்றும் முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டியதுடன், அதற்கு உதவுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை