மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

காவிரி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரைத் திறந்து வைத்தார்.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானது என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் 8 கண் மதகு பகுதியில் இருந்து மலர் தூவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரைத் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணை திறப்பால், சாகுபடி பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த திகதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடி, மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சி.யாகும்.

காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16 இலட்சம் ஏக்கர் பாசன வசதிக்கு மேட்டூர் அணையையே விவசாயிகள் நம்பியுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ஆம் திகதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இதுவரை 15 முறை ஜூன் 12 ஆம் திகதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2008ஆம் ஆண்டும் ஜூன் 12 ஆம் திகதிக்குப் பிறகு கடந்த 12 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் குறித்த திகதியில் நீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.