சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தையில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீட்டிற்கான அடிக்கல் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியினால் இன்று நாட்டிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரைக்கும் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை நாமறிந்த விடயமே.

எனினும் இது தொடர்பாக பொலிஸாரால் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார் எம்மிடம் உதவிகோரும் பட்சத்தில் நாங்கள் பொலிஸாருக்கும் உரிய உதவிகளை உரிய நேரத்தில் வழங்கி வருகின்றோம்.

என்றபோதும், இந்த விடயங்கள் தொடர்பாக பொது மக்களுக்கு நிறைய தகவல்கள் தெரியும். சட்டவிரோதமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமேயானால் பொதுமக்கள் எங்களுக்கு உரிய தகவல்களை வழங்கும்போது நாம் அதனை பொலிஸாருடன் இணைந்து அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையினையும் உடனடியாக நாங்கள் எடுக்க முடியும்.

இதேவேளை, இராணுவத்தினரால் பொதுமக்களுக்கான சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் மக்களுக்கு சமூக வேலைத் திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக வறிய மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் பணி முன்னெடுக்கப்படுவதுடன் இதுவரை 710 வீடுகளுக்கும் மேல் நாங்கள் வறிய மக்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.