பிரதமர் மஹிந்தவை மெய்சிலிர்க்க வைத்த முதியவர்

பொலன்னறுவை- மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் நோயுற்றிருக்கும் நிலையிலும் கொரோனா நிதியத்துக்கு 5,000 ரூபாயை வழங்கி,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மெய்சிலிர்க்க வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு என எழுதப்பட்ட கடிதமொன்று அலரி மாளிகைக்கு கிடைத்த நிலையில், அதனை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பிரதமரின் நேரடிப் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளனர்.

மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராமச் சங்க உறுப்பினரான எஸ்.பீ.ஹேவாஹெட்ட என்ற 86 வயது வயோதிபரே இக்கடிதத்தை எழுதி அதனுடன் 5 ஆயிரம் ரூபாய் பண தாளை இணைத்து அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் இப்போது 86 வயதைக் கடந்த நிலையில் நோயுற்றிருக்கின்றேன்.

நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையிலும் மக்களை வாழ வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளையிட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன்.

மேலும் கொரோனா நிதியத்துக்கு நானும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆகவே கடிதத்துடன் இணைத்திருக்கும் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பண தாளை கொரோனா நிதியத்தில் சேர்த்து என்னையும் அந்தப் புண்ணிய கருமத்தின் பங்காளியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நீங்கள் எனக்கு செய்த உதவிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை” என  அவர் குறிப்பிட்டிருந்தார்.

இக்கடிதத்தைக் வாசித்த பிரதமர், மிகவும் மகிழ்ச்சியடைந்த நிலையில், நோய்ப்படுக்கையிலிருந்து கொண்டும் நாட்டைப் பற்றிச் சிந்திப்பவர்களும் உள்ளார்கள் எனப் பெருமிதம் அடைந்துள்ளார்.

மேலும் குறித்த முதியவர் அனுப்பிய பண தாளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளுக்கு அவரைக் கொண்டே ஒப்படைக்க பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதாவது, ஜனாதிபதியின் பிறந்த தினத்தன்று, அந்த முதியவருக்கு அழைப்பு விடுத்து, அவரது கைகளால் அந்த பணத்தை கொரோனா நிதியத்துக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் செயலாளர் காமினி செனரத்துக்கு, மஹிந்த பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.