போலியான பெயரில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற சஹ்ரானின் சகோதரன்- விசாரணையில் முக்கிய தகவல்

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசீம், போலியான பெயரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ரில்வான் ஹாசிம் உயிரிழந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போலியான பெயரில் பதிவாகி சிகிச்சை பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் எச்.கே.சந்தன, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கியிருந்தார்.

அவர் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த  2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27 ஆம் திகதி, தலை, இடது கண் மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நோயாளியுடன் மேலும் நான்கு பேர் வந்திருந்தனர். குறித்த நோயாளி, எம்.ஐ.சாஹிட் என தன்னை பதிவு செய்துகொண்டார்” என்று குறிப்பிட்டார்.

இதன்போது, ஆணைக்குழு உறுப்பினர்கள், சஹாரானின் சகோதரர் ரில்வான் ஹாசீமின் புகைப்படத்தைக் காட்டி, அந்த நாளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் இவரா என வினவினர்.

புகைப்படத்தை பார்வையிட்ட வைத்தியர், அது ரில்வான் ஹாசீம்தான் என்பதை அடையாளம் காட்டினார்.

அதேபோன்று, மாவனெல்லயில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா ஹக்கின் புகைப்படத்தைக் காண்பித்து இவரை அடையாளம் காட்ட முடியுமா எனக் கேட்டனர்.

அதற்கு பதிலித்த வைத்தியர், குறித்த நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்தவருக்குப் பொறுப்பானவர் அவர் என்று பதிலளித்தார்.

மேலும், குறித்த தினத்தன்று கடமையில் இருந்த தாதி ஒருவர் சாட்சியம் அளிக்கையில், வேலைத்தளத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் காயங்கள் ஏற்பட்டதாக காயமடைந்தவர் கூறியதாகவும் ஆனால் காயங்களின் தன்மை குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த நோயாளியை வைத்தியசாலை பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்த முற்பட்ட போது, நோயாளியுடன் வருகைத்தந்தவர்கள் கோபமடைந்தாகவும் அப்போதிருந்தே நோயாளி கோபத்துடன் நடந்துக்கொண்டதாகவும் அவர் ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.