தமிழ் மக்களிள் ஆதரவை ஒருபோதும் மறக்கப்போவதில்லை- மைத்திரி

தன்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர் எனவும் அதனைத் தான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என தான் நம்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் தான் வழங்கிய சலுகைகள் இவர்களால் வழங்க முடியுமா என்பதை தெளிவாகக் கூறமுடியாது எனக் கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் செயற்பாடுகள், புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நாட்டின் கட்டாய தேவையாக இருந்தது. அதுவரை நாட்டில் நிலவிய மிக மோசமான செயற்பாடுகள், அதிகார அடக்குமுறைகள் என்பவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக நான் தலைமையேற்கத் தீர்மானித்தேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த பின்னர் நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாகச் செயற்படுத்த என்னாலான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளேன் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதுமட்டுமல்லாது நிறைவேற்று அதிகாரத்தை அதிகமாகவே கையாண்ட தலைவரும் நானானவே இருக்கிறேன்.

இந்த நாட்டில் எந்தவொரு அரச தலைவரும் முன்னெடுக்காத தைரியமான வேலைத் திட்டங்களை நான் எனது ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்தேன். நான் செயற்பட்டதைப் போல வேறு எந்தத் தலைவரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்த நாட்டில் எனது நல்லாட்சி அரசாங்கத்தில் போன்று சுதந்திரம் வேறு எந்த ஆட்சியாளர்களும் வழங்கியிருக்க முடியாது. நான் வழங்கிய சுதந்திரத்தைக் கொண்டே ஊடகங்கள் என்னை தாக்கினர். இன்றும் விமர்சித்தே வருகின்றனர்.

ஆனால், நான் அதனைக் கண்டு கவலைப்படவில்லை. ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் என்னால் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நான் வழங்கிய சுதந்தரத்தை நானே விமர்சிக்க விரும்பவில்லை. என்னை விமர்சிக்கும் அனைவருக்கும் நான் கூறுவது ஒன்றுதான். நீங்கள் அனைவரும் இன்று என்னை விமர்சித்து கேலி செய்யும் சுதந்திரம் என்னால் வழங்கப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம்.

இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி ஊழலே நல்லாட்சி அரசாங்கத்திற்குள் குழப்பம் ஏற்படுவதற்குப் பிரதான காரணியாக அமைந்தது.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழலாக மத்திய வங்கி ஊழல் பதிவாகியது. மத்திய வங்கியில் பிணைமுறி மூலமாக எவ்வளவு பெறுமதியான தொகை களவாடப்பட்டது என்ற சரியான எண்ணிக்கை இன்னமும் கூறப்படவில்லை.

மத்திய வங்கி பிணைமுறி குறித்து ஆராயும் ஆணைக்குழுவை நியமித்தமையே நல்லாட்சி அரசாங்கத்தில் முரண்பாடுகள் ஏற்பட பிரதான காரணியாகும். அதாவது அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய நான் எடுத்த முயற்சி அதிகாரத்தில் இருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை.

அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய நான் சகல நடவடிக்கையும் எடுத்து சிங்கபூர் சென்று சிங்கபூர் பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்களும் அர்ஜுன மகேந்திரனை எமக்கு வழங்க இணக்கம் தெரிவித்தனர். அதேபோல் சர்வதேச பொலிஸாருக்கும் நான் அறிவித்தல் விடுத்தேன்.

நிதி மோசடியில் குறித்த நபரைத் தேடுவதாகச் சுட்டிக்காட்டி நான் அறிவிப்பொன்றை விடுத்தேன். ஆனால் எனது அரசாங்கத்தில் பிறிதொரு குழு சர்வதேச பொலிஸாருக்கு வேறு கடிதம் ஒன்றினை அனுப்பினர்.

என்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

அதேபோல், எனது ஆட்சியில் வடக்கு கிழக்கில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காணிகள் விடுவிப்பு அதில் மிக முக்கியமான விடயமாகும்.

இந்த ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என நான் நம்பவில்லை. ஆனால் நான் வழங்கிய சலுகைகள் இவர்களால் வழங்க முடியுமா என்பது குறித்து என்னால் தெளிவாகக் கூறமுடியாது. எவ்வாறு இருப்பினும் இந்த நாட்டில் தமிழ் மக்களும் சம உரிமைகள், அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.