பிறந்து ஒரு நாளான சிசுவை குழி தோண்டி புதைத்த பெண்: நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியா- நோர்வூட், ஜனபதய கொலனி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், பிறந்து ஒரு நாளான சிசுவை வீட்டின் பின்புறத்திலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சந்தேகநபரான பெண்ணை நோர்வூட் பொலிஸார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில், 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நோர்வூட் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் திருமணமாகாத 26 வயதுடைய பெண்ணொருவரே குழந்தயை பிரசவித்து இவ்வாறு புதைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், இரண்டாவது குழந்தையை பிரசவித்து குழிதோண்டி புதைத்துள்ளார் எனவும் பெண்ணின் வீட்டிற்கருகில் அதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு, அவரின் தலைமையில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்கப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை