கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்துகொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ்

கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார ரீதியிலான செயற்பாட்டாளர்களுடன் நடத்திய சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு – கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் மேற்கொண்ட தவறுகளையும் அது ஏற்படுத்தி இருக்கின்ற எதிர் விளைவுகளையும் மனதில்வைத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை வலுப்படுத்துவார்களாயின், சிறப்பான வாழ்வாதாரத்தை, கௌரவமான வாழ்கையை, நியாயமான அரசியல் தீர்வை தேசிய நல்லிணக்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

எனவே, கட்சியின் செயற்பாட்டாளர்கள் அனைவரும், அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்களையும் அதற்கான காரணங்களையும் மக்களின் மனங்களில் பதியும் வகையில் எடுத்துக்கூறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.