மட்டக்களப்பில் தேர்தல் ஒத்திகை வெற்றி – அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் தேர்தல் ஒத்திகை வெற்றியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான ஒத்திகை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் தேர்தல்கள் நடத்துவது தொடர்பான ஒத்திகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இந்த பொதுத்தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பேணும் வகையில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்ததுடன், தேர்தல் கடமையில் ஈடுபடுவோரும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இன்றைய இந்த தேர்தல் ஒத்திகையில் பொதுத்தேர்தலில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் காண்காணிப்பாளர்களும்  கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தேர்தல் ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர்கள் என பெருமளவானோர் இந்த ஒத்திகையில் கலந்துகொண்டனர்.

இதன்போது பெரியகல்லாறு உதயபுரம் பகுதியில் இருந்து 300 வாக்காளர்கள் இன்றைய வாக்களிப்பில் அனுமதிக்கப்பட்டனர். வாக்காளர்கள் சுகாதார முறையின் கீழ் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்றைய இந்த தேர்தல் ஒத்திகை வெற்றியளித்துள்ளதாகவும் அதில் ஏற்பட்ட தவறுகள் திருத்தப்பட்டு எதிர்காலத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.