அனுஷியாவின் பொறுப்பில் இ.தொ.கா வழிநடத்தப்படும்- ஜீவன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் வரை, அதன் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜாவின் பொறுப்பில்  அதன் செயற்பாடுகள் முன்னெக்கப்படுமென இ.தொ.கா இளைஞரணிச் செயலாளரும் காங்கிரஸின் பிரதிப்பொதுச் செயலாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெறுவதாக வெளியாகிய செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெறுவதாக, சமூக ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ஆனால்  அவ்வாறான ஒரு போட்டி நிலை இ.தொ.கா.க்குள் இல்லை. எனவே உண்மைக்குப் புறம்பான விடயங்களைப் பரப்பி, மக்களை குழப்ப வேண்டாம். காங்கிரஸின் இன்றைய ஒற்றுமையைப் பார்த்து சிலருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது.

அதாவது, காங்கிரஸின் ஒற்றுமையை சகித்துகொள்ள முடியாத சிலர், கட்டுக்கதைகளைக் கூறிவருகின்றனர். ஆனாலும் எமது கட்சி மேலும் பலப்படுத்தப்படுமே தவிர பிளவுகள் ஏற்படாது.

அதேநேரத்தில்,காங்கிரஸின் மூத்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் மறைவின் பின்னர், சுமார் ஒன்றரை வருடம், தலைமைத்துவம் இன்றியே காங்கிரஸ் வழிநடத்தப்பட்டு வந்துள்ளது.

எனவே பொதுத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், ஜனநாயக ரீதியில் காங்கிரஸின் தேசிய சபை கூடி, காங்கிரஸின் தேசியத் தலைவரை தீர்மானிக்கும்.  அதுவரை காங்கிரஸின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜாவின் பொறுப்பில், காங்கிரஸ் ஜனநாயக ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.