போராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்! மட்டுவில் முன்னாள் போராளிகள் முன் மாவை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை வெல்லாவெளியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்திந்தார்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய ஞா.சிறிநேசன் அவர்களின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சாணக்கியன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு ஊடகப் பேச்சாளர் கே.சாந்தன் உட்பட கட்சியின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்தும் முகமாக ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அத்துடன் போராளிகளின் வாழ்வாதார முன்னேற்றம், அவர்களின் அரசியற் பிரவேச முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மாவை சேனாதிராஜா குறிப்பிடுகையில், பேராளிகளின் தியாகமானது உன்னதமானது, எவராலும் எண்ணிப்பார்க்க முடியாத விடயம். அவர்களின் தியாகங்களை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம். அந்த தியாகத்தின் மீதுதான் நாங்களும் எழுந்து நிற்கின்றோம். எனவே போராளிகள் போராடியதும், நாங்கள் வாதாடியதும் வீண்போகவில்லை. நாங்கள் ஒருபோதும் சோரம் போகமாட்டோம் என்று தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை