ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்
இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்க வீதத்தை மேலும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நாணயச்சபை இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 ஜுன் 16 ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு இதன்போது தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் உள்நாட்டு நாணயச் சந்தைக்கு மேலதிகமாக 115 பில்லியன் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளின் நிதிச்செலவை குறைத்து பொருளாதாரத்திற்கான புழக்கத்தை அதிகரிக்க முடியும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மோசமான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் எதிர்காலத்தில் பொருளாதாரம் மற்றும் நிதியியல் உறுதிப்பாடு மீது தீவிர அழுத்தம் உருவாகக்கூடும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை