சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருவரை ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவித்து நீதிவான் ஏ.பீற்றர் போல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை உத்தரவிட்டார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுன்னாகம், இலங்கை வங்கி கிளைக்கு அண்மையான பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் மாலை பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றது.

முல்லைத்தீவைச் சேர்ந்த ரணா பிரசாத் (வயது -24), மருதனார் மடத்தைச் சேர்ந்த நெல்லையா நேமிநாதன் (வயது-20) ஆகிய இருவரது பிறந்தநாள் குறித்த வீட்டில் கொண்டாடப்பட்டது.

இந்தக் கொண்டாட்டம் தொடர்பாக தகவலறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார், குறித்த நிகழ்வில் பங்கேற்ற 40இற்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அவர்களில் 26 பேரை மட்டும் கைது செய்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகத் தெரிவித்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று பிற்பகல் முற்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ், மன்றில் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இதன்போது, “சந்தேகநபர்கள் சட்டவிரோதமான கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். வன்முறை ஒன்றுக்குத் தயாரான நிலையில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களின் கைவிரல் ரேகைகள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அவர்களின் விவரங்கள் வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. வேறு பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் இருந்தால் சந்தேகநபர்களை ஒப்படைக்க வசதியாக அவர்களை விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று அவர் நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “பிறந்தநாள் நிகழ்வில் ஒன்றுகூடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் தொடர்பில்லை. அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று வாதிட்டனர்.

இதையடுத்து, வழக்கில் முற்படுத்தப்பட்ட சிறுவர்கள் இருவரது பெற்றோரையும் அழைத்து அறிவுரை வழங்கிய நீதிவான் ஏ.பீற்றர் போல், அவர்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவித்தார். ஏனைய 24 பேரையும் வரும் ஜூன் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.