தமிழர் தாயகத்தை சிதைக்க கோட்டா கங்கணம்: மாவை கண்டனம்!
“வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி. தமிழர்களின் எத்தனையோ உயிர்த் தியாகங்கள் நிறைந்த இந்தப் புனித பூமியைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசும், சிங்களக் கடும்போக்காளர்களும் கங்கணம் கட்டிச் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதியோம். இது தொடர்பில் எமது பலத்த எதிர்ப்பை ஜனாதிபதியிடம் தெரிவிக்கவுள்ளோம். அதேவேளை, சர்வதேசத்திடமும் முறையிடவுள்ளோம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கடும்போக்குவாத சிங்களப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர். கிழக்கைப் போன்று தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் வடக்கிலும் ஜனாதிபதி விசேட செயலணியை நிறுவ வேண்டும் எனவும் அவர்கள் ஜனாதிபதியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழர் தாயகத்தை அபகரித்து இங்கு தமிழரின் வரலாற்றுத் தடயங்களை அழித்து திரிவுபடுத்தி இதைப் பௌத்த – சிங்கள வரலாற்றைக் கொண்ட தேசமாக மாற்றுவதே சிங்களப் பேரினவாதத்தின் குறிக்கோளாக அன்று தொடக்கம் இருந்து வருகின்றது. இதை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு செயற்பட ஆரம்பித்துள்ளது. அதற்காகவே கிழக்கின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் படை அதிகாரிகளையும் பௌத்த பிக்குகளையும் மட்டும் கொண்ட விசேட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி அண்மையில் நிறுவியிருந்தார். இந்தநிலையில், கிழக்கைப் போன்று வடக்கிலும் விசேட ஜனாதிபதி செயலணியை நிறுவ வேண்டும் என்று சிங்களக் கடும்போக்காளர்கள் கூக்குரல் இடுகின்றனர். சிங்களப் பேரினவாதத்தின் இந்தச் தன்னிச்சையான முடிவுகளை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். தமிழர் தாயகத்தை பௌத்த – சிங்கள தேசமாக மாற்ற நாம் ஒருபோதும் அனுமதியோம்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை