தேர்தலில் மாற்று அணிகளை தோற்கடிக்கவேண்டும் தமிழர் – சம்பந்தன் அழைப்பு

“வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. இந்தநிலையில், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடன் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற பெயரில் பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளையும், சுயேச்சைக் குழுக்களையும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும். அதனூடாக தமிழர்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதைத் தமிழ் மக்கள் இம்முறையும் நிரூபித்துக்காட்ட வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், அரசியல் தீர்வுக்காகவும் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுத்து வருகின்ற ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அதனால்தான் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகளும், இலங்கை வரும் சர்வதேச பிரமுகர்களும் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்தான் பேச்சுகளை நடத்துகின்றனர்.

தமிழர்களின் உரிமைகளையும், அரசியல் தீர்வையும் வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இந்தப் பயணத்தின் இலக்கை அடைவது வெகுதூரத்தில் இல்லை. அதை நாம் அடைந்தே தீருவோம். சர்வதேசமும் எமது பக்கம் இருப்பதால் அந்த இலக்கை அடைவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.

தமிழ் மக்களுக்கு நாம் உண்மையாகவே இருக்கின்றோம். அவர்களுக்கு நாம் துரோகமிழைக்கவில்லை. அதனால் அவர்கள் எம்மை முழுமையாக நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையின் வெளிப்பாட்டை இம்முறை பொதுத்தேர்தலிலும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்றே நாம் நம்புகின்றோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.