ஜனாதிபதி கோட்டாபயவின் 71 ஆவது பிறந்த தினம் இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  தனது 71 ஆவது பிறந்த தினத்தை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் என பலரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 1949 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி பிறந்தார்.   இவர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றவர்.

மேலும் 1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதுடன், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கற்கை தொடர்பான பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உயர் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதுடன், யுத்தத்தில் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக ரண விக்ரம மற்றும் ரணசூர முதலான பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

1991 ஆம் ஆண்டு லெப்டினன் கேணலாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப நெறியை கற்று அமெரிக்காவுக்குச் சென்ற அவர், கலிபோர்னியா லொயெலா சட்ட பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பதுறையில் பணியாற்றினார்.

2005 ஆம் ஆண்டு, அவரது  சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர், நாட்டின் பாதுகாப்பு செயலாளராக பணியை ஆரம்பித்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியவராவார்.

அத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்டு, 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.