கடந்த அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனாவால் பலர் உயிரிழந்திருப்பர்- மஸ்தான்
கடந்த அரசாங்கம் இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால் மக்களில் அதிகமானோர் ‘கொரோனா’ வந்து இறந்திருப்பார்கள் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள சூரிய கட்டைகாட்டு மாதர் பெண்கள் அமைப்பை, இன்று ( சனிக்கிழமை) மதியம் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து ஆளும் கட்சியாகவே செயற்பட்டது.
இதன்போது தமிழ் கட்சிகள் சில கூறிய உரிமை, தேசியம் ஆகியவற்றை பெறுவதற்காக பல்வேறு விடயங்களை சலுகைகளை அரசிடம் பெறவில்லை.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ, தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு சிறுபான்மை சமூகத்தில் அதிக வாக்குகள் கிடைத்த இடம் வன்னி தேர்தல் தொகுதியாக உள்ளது.
தேர்தல் காலப்பகுதியில் தமிழ் கட்சிகள் பலர் கோட்டபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், வெள்ளைவான் வரும் என பல பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர். ஆனாலும் இந்த 8 மாத காலப்பகுதியில் சிறப்பான ஒரு ஆட்சியை ஜனாதிபதி நடத்தியுள்ளார்.
தொடர்சியாக மக்களின் வாக்குகளை பெருவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை கடந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்தனர். தற்போதும் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் கடந்த அரசாங்கம் இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால், மக்களில் அதிகமானோர் ”கொரோனா’ வந்து இறந்திருப்பார்கள். கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் அவ்வாறான நிலைமையை தடுத்துள்ளது.
மேலும் இந்த தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுடன் ஆட்சி அமையும் சந்தர்ப்பம் உள்ளது.
எனவே கடந்த தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து எமது அபிவிருத்தி, உரிமை என அனைத்தையும் ஆளும் கட்சியில் இருந்தாலே பெற முடியும்.
ஆகவே பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்குளை அளித்து வெற்றி பெற செய்யுங்கள்” என அவர், மக்களிடம் கோரியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை